வேலூரில் யார் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதை ரஜினி ரசிகர்களால் தீர்மானிக்க முடியாது. திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு எந்த திரைப்பட நடிகர்களும் அரசியலில் பிரகாசித்தது கிடையாது. எனவே அந்த வீண் முயற்சி அவருக்கு வேண்டாம் என்று அவருடைய ரசிகன் என்கிற வகையில் நான் என்னுடைய ஆலோசனை சொல்லுகிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
அவரின் கருத்துக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் அல்லது வரக்கூடாது என்பதற்கு காங்கிரஸ்தான் செர்டிபிகேட் கொடுக்கிறார்களா. அழகிரி இந்த வார்த்தைகளை பின்வாங்க வேண்டும். எந்தக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் சான்றிதழ் கொடுக்காதீர்கள் என்றார்.
அதேபோல் அழகிரியின் கருத்துக்கு பதிலளித்த அர்ஜுன் சம்பத், காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி ரஜினிகாந்துக்கு ஒரு யோசனை கொடுத்திருக்கிறார். அவருக்கு என்ன கெட்ட எண்ணம் என்றால் ரஜனிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவது உறுதி, அவர் வெற்றிபெறுவது உறுதி, அப்படி வந்தால் ஸ்டாலினின் முதல்வர் கனவு போச்சு. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். வருங்கால தமிழக அரசியல் ஸ்டாலினான ரஜினிகாந்தா என்றுதான் இருக்கப்போகிறது எனக்கூறினார்.