Skip to main content

முல்லைப் பெரியாறு ஆற்றில் குளிக்க வேண்டாம்!! ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை!!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

முல்லைப் பெரியாறு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என தண்டோரா மூலம் போலீஸார் விழிப்புணர்வு மூலம் எச்சரித்து வருகிறார்கள்.
 

police warns people not to take bath in mullai periyar river


தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆண்டிபட்டி அருகே உள்ள வருஷநாடு, கண்டமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் போடி பகுதியில் கனமழை பெய்து கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் வராக நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைப்பெரியாறு ஆற்றுப்படுகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் தொடர் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் முல்லைப் பெரியாற்று நீரில் மூழ்கி தேனி மாவட்டத்தில் நான்கு பேர் பலியானார்கள்.

எனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், லோயர்கேம்ப் மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்டோரா மற்றும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பொதுமக்கள் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க, துணி துவைக்க செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

குழந்தைகளையும் சிறுவர்களையும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் விளையாடவோ குளிக்கவோ அனுமதிக்க வேண்டாமென அறிவுறுத்தியும் வருகிறார்கள். இதனை மீறி ஆற்று பகுதிக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
 

police warns people not to take bath in mullai periyar river


தேனி மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் சாய்சரண் உத்தரவின்பேரில் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது நீர்நிலைகளில் குளிப்பதால் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை வர வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும் என எஸ்.பி. சாய்சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையம்  உட்பட்ட பகுதிகளில்  தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்