கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் தமிழ்ச்செல்வன்(36). இவர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு நிறைமதி(3) என்ற பெண் குழந்தையும், வெங்கடேஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
தமிழ்ச்செல்வன் தொடர்ந்து குடித்து வந்தார். இதனால் அவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் கடந்த மே மாதம் 28ம் தேதி திருச்சி கே.கே. நகர் அன்பழகன் தெருவில் உள்ள தனியார் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்தனர்.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ்ச்செல்வன் உயிரிழந்துவிட்டதாக திருச்சி தனியார் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் கூறி அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊர் வந்த அவர்கள். நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வனின் இறுதி நடக்கு செய்யும் போது அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்கள் உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வனின் உறவினர்களுக்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் திருச்சி தனியார் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு சென்று கேட்ட போது அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு சரியான பதில் கூறிவில்லை. அந்த மையத்தில் பலர் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் அவரது உறவினர் பாலமுருகன் தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என்று திருச்சி கேகே நகர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து நேற்று காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் முன்னி லையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தமிழ்ச்செல்வன் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். திருச்சி கேகே நகர் போலீஸாரும் உடனிருந்தனர்.
புதைக்கப்பட்ட போலீஸ்காரர் தமிழ்ச்செல்வனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.