நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் மனுக்களை இன்று (01/10/2019) வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான நடேசன் பரிசீலனை செய்தார்.
அது சமயம் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் மாரியப்பன், அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன். தனது அபிடவிட்டில் 5- வது காலத்தில் வழக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளார். அவர் குடியிருக்கும் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். நம்பர் 324, 2007. 329, 2007. 254, 2013 மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன அதை அவர் மறைத்துள்ளார். எனவே அவரது வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவுடன் எப்.ஐ.ஆர். நகலையும் கொடுத்திருக்கிறார்.
அது சமயம் காங்கிரஸ் வழக்கறிஞர்களும், அதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். நீண்ட நேர விவாதத்திற்குப் பின்பு, அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிய தேர்தல் அதிகாரி, அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அறிவித்தார்.
இது குறித்து சுயேட்சை வேட்பாளர் மாரியப்பன் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தை மீறிய நாராயணன், வழக்கு இல்லை என்று தன் அபிடவிட்டில் கூறியுள்ளார். அதன் காப்பியோடு வழக்கு பற்றிய எப்.ஐ.ஆர். காப்பியும் சேர்த்தே நான் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தேன். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன அதிகாரி என் மனுவை வாங்கவே இல்லை. நான் ஆதாரங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிக்குப் புகார் செய்யப் போகிறேன். நீதிமன்றமும் செல்வேன் என்றார்.
வழக்கு நிலுவை குறித்து அதிமுக வேட்பாளர் நாராயணனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதில் அதற்கு பதில் சொல்லாமல், என்னுடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று மட்டுமே சொல்லி விட்டு வேகமாகக் கிளம்பி விட்டார்.