புதுச்சேரி திமுக மகளிரணி சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் நாராயணசாமி, மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,
"காவிரி நீர் விவகாரத்தில் மேலாண்மை ஆணையம் 31 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு நம்முடைய உரிமைகளை பெற்றிருக்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை செயல்பாட்டில் கொண்டு வந்தால் மட்டுமே விவசாயிகள் பயனடைய முடியும். எட்டு வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்காமல் காடு, விவசாய நிலங்கள், மலைகளை அழித்து மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் முனைப்புடன் உள்ளார். மக்களின் போராட்டங்களை பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் கலவரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்" என்று குற்றம் சாற்றினார்.
அதுபோல் 'தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் கூறும் போது, "காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது ஆறுதலை தருகிறது என்றும், ஆனால் இந்த முடிவை கர்நாடக அரசு எந்தளவிற்கு ஏற்று நடைமுறைப்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் காவிரி மேலாண்மை ஆணையம் அளித்துள்ள வழிமுறைகளை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், "சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு மாநில அரசுக்கு உடன்பாடு உள்ளதா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.