திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மக்காச்சோள பயிரை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என்பதாலும் ஒவ்வொருமுறையும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்டாலும் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த ஆடி மாதம் மக்காச்சோளம் பயிரை இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். அவை நன்கு வளர்ந்து கதிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் தற்போது மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பித்துள்ளது. தோட்டங்களில் மக்காச்சோள பயிரில் 10 கதிர்களில் ஒரு கதிரில் படைப்புழுக்கள் தெரிகின்றன. இதுதவிர கதிர்களை நாசம் செய்த புழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 20ஆயிரம் முதல் 26ஆயிரம் ஹெக்டேர் அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. அவற்றில் ஏற்பட்டு வரும் அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் வருடாந்திர விளைச்சலில் 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்து வருகிறது. எங்கள் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளன. அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பயிர் வளர்ச்சிக்காக முதலீடு செய்த ரூபாயை கூட எங்களால் எடுக்க முடியாது.
பயிர்களை காப்பாற்ற உரம் மற்றும் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தினாலும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. வேளாண்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு ஒட்டுமொத்தமாக புழுக்களை கட்டுப்படுத்தி அழிக்க வேண்டும் என்றார். 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு வருடமும் நாங்கள் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்று கூறினார்கள்.
மேலும், வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து முறையாக பயிர்களை பார்வையிடுவது கிடையாது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இப்பகுதி விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டும், அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டும் நஷ்டமடைந்து வந்தாலும் இந்த வருடமாவது நாம் தப்பித்துவிடுவோம் என மக்காச்சோளம் பயிரிட்டனர். அதிலும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தெரிய தொடங்கியவுடன் விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர்.
வேளாண்துறை அதிகாரிகள் இனிமேலாவது விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அதிக அளவில் வேளாண்துறை பணியாளர்களை வரவழைத்து ஒட்டுமொத்தமாக இப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் புழுக்களை அழிக்கும் மருந்துகளை தெளிக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் வீணாகவும் வாய்ப்புள்ளது.