விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரான இளைஞர் செல்லத்துரை கடந்த 28 ஆம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் குளக்கரையில் பிணமாக கிடந்தார். இது அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையின் முன்னாள் காதலி ஒருவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், “திருமணத்திற்கு முன்பு செல்லதுரையும் நானும் காதலித்தோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது குடும்பத்தினர் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். எனது கணவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் எனது சகோதரியை எனது கணவரின் அண்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். எனது சகோதரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் எனது சகோதரி இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று திருமணம் செய்து கொண்டு தனி வாழ்க்கை நடத்துகிறார். அவரது இரண்டு குழந்தைகளும் திக்கற்ற நிலையில் இருந்தனர். அந்த குழந்தைகளையும் நான் வளர்த்து வருகிறேன்.
இந்த நிலையில் எனது முன்னாள் காதலன் செல்லத்துரை என்னை தேடி வந்ததால் தனிமையில் இருந்தோம். அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி என்னிடம் வந்து மிரட்டினார். சம்பவத்தன்று இரவு எனது வீட்டுக்கு வந்த செல்லத்துரை வீடியோ காட்சிகளை காட்டி என்னை தனிமையில் அழைத்தார். நான் இனிமேல் இதுபோல் உறவு வேண்டாம் எனது கணவர் எனது சகோதரி அவரது குழந்தைகளை நான் காப்பாற்ற வேண்டும் நீ இங்கிருந்து போய் விடு இனிமேல் இங்கு வரக்கூடாது என்று எடுத்துக் கூறினேன். அவரது ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார். உடனே நானும் உனது தொல்லையை தாங்க முடியவில்லை நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அவருக்கு முந்தி வேறொரு அறைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள தூக்கு மாட்டினேன். இதற்குள் செல்லத்துரை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பயந்து போன நான் எனது உறவினர்கள் மூன்று பேர் உதவியுடன் இறந்து போன செல்லத்துரையின் உடலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை பின்புறம் உள்ள குளக்கரை பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிட்டோம்” என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதோடு செல்லதுரையின் உடலை தூக்கி வந்த மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். செல்லத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என்பது அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என்கிறார்கள் போலீசார். இருந்தும் செல்லத்துரை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.