தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.