சென்னை தீவுத்திடல் அருகே உள்ள கல்லறை நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் பணியை டிசம்பர் 29ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆரம்பித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு குடியிருப்புகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்லறை நகர் பகுதி மக்களுக்கு ஆதரவாகவும், குடியிருப்புகளை அகற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிராகவும் சமூக செயல்பாட்டாளரும், ஆட்டோ ஓட்டுநருமான இசையரசு குரல் கொடுத்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவல்லிகேணி காவல் ஆய்வாளர் மோகன்தாஸ், இசையரசை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த இசையரசை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவ்வாறு சமூக செயல்பாட்டாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.