Skip to main content

பணி நியமன ஆணையுடன் வந்த இளைஞரை காவல்நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Police arrest youth who came with appointment order

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் பணியில் சேர்வதற்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் அதற்கான பணி நியமன உத்தரவையும் கையில் எடுத்துக்கொண்டு பணியில் சேர்வதற்காக நேற்று (25.11.2021) ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் என்பவரை சந்தித்து தனது பணி உத்தரவை வழங்கியுள்ளார். அதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கையொப்பம் போடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நேர்முக உதவியாளர் பிரபாகரன், “இது என்னுடைய கையெழுத்து இல்லை. மேலும் தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

 

இந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவு உனக்கு யார் அளித்தது” எனக் கேட்டு அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார். அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரபாகரன், தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞர் மற்றும் அவருடன் வந்த அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், அவர் பெயர்  குமரேசன் (28) என்றும் இவர் செஞ்சி அருகே உள்ள கடையூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞர் கூறுகையில், “சென்னையில் பிபிஏ பட்டம் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காததால் மறைமலை நகர் பகுதியில் வெல்டராக பணிபுரிந்துவந்தேன்.

 

அப்போது அங்கு ஏழுமலை என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் கூறினார். அதன்படி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், 2 லட்சம் பணம் கொடுத்தால் அந்தப் பணியைப் பெற்றுத் தருவதாகவும் கூறினார். அதன்படி கடந்த 19ஆம் தேதி என் வீட்டிற்கு தபால் மூலமாக இந்தப் பணி ஆணை வந்தது. அதில் 25ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பணியில் சேர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த வேலைக்கான உத்தரவை எடுத்துக்கொண்டு வேலையில் சேர்வதற்காகத்தான் இங்கு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் பணி நியமன உத்தரவில் ஏழுமலையின் முகவரி ஏதும் இல்லை. பணம் பெற்றுக்கொண்டு மோசடியாக போலி பணி நியமன ஆணையைத் தயாரித்து, அதனை தபால் மூலம் குமரேசன் வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உண்மைத் தன்மையைப் பொறுத்து போலி பணி நியமன ஆணையைத் தயாரித்துக் கொடுத்த ஏழுமலை மீது வழக்குப் பதிவுசெய்ய முடியும். மேலும், அவரை கைது செய்து விசாரித்தால்தான்  இதில் உள்ள கூடுதல் விவரங்கள் வெளியே தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்