திருவெறும்பூர் பகுதியில் காட்டூர், அம்மன் நகர், பெல் குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களைத் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், கொள்ளை நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகை மற்றும் சிசிடிவி காட்சி போன்ற தடயங்களின் அடிப்படையில் திருட்டு, கொலை, கொள்ளைகள் வழக்கில் தொடர்புடையவர்கள் கரூர் லால்பேட்டை காவல் சரகத்தைச் சேர்ந்த சங்கர் (எ) வெட்டு சங்கர் (34), கோபால் (எ) கருப்பத்தூர் கோபால், தொட்டியம் கொளக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் (40) ஆகியோர் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதில் கருப்பத்தூர் கோபால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்துபோனார். இந்நிலையில், அம்மன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சங்கர், செல்வக்குமார் ஆகிய இருவரை திருவெறும்பூர் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த அனைத்து நகைகளும் கருப்பத்தூர் கோபால் மனைவி பொன்மணியிடம் (36) இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் பொன்மணியை கைது செய்ததோடு, அவருடன் தொடர்புடைய தொட்டியத்தைச் சேர்ந்த ஜெகன் (46) உட்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து திருவெறும்பூர், பெல், நவல்பட்டு பகுதியில் கொள்ளையான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், LED டிவி ஆகியவையும் மீட்கப்பட்டன. மேலும், கொள்ளைக்குப் பயன்படுத்திய கார், இருசக்கர வாகனங்கள், கடப்பாறை, கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைத் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.