Skip to main content

"மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்த பெருமை பாமகவுக்கு மட்டும்தான் உண்டு" - ராமதாஸ்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

pmk founder ramadoss talks about union government budget 

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த ஒன்றாம் தேதி  2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றிய போது பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் புதிய  அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

 

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்காக  ரூ.1158 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் தேவைகளை ஒப்பிடும்போது இது குறைவு தான் என்றாலும், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழ்நாட்டின் தொடர்வண்டிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு தொடர்வண்டி துறையின் பொது மேலாளர் ஆர்.என்.சிங், தொடர்வண்டி திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.6,080 கோடியும், ஒட்டுமொத்த தெற்கு தொடர்வண்டி துறைக்கும் சேர்த்து ரூ.11,313 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விகிதத்துடன் ஒப்பிடும்போது இந்த நிதி ஒதுக்கீடு குறைவாகும். ஆனாலும், தமிழ்நாட்டில் திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை,  தருமபுரி - மொரப்பூர், மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, ஈரோடு - பழனி, ராமேஸ்வரம்- தனுஷ்கோடி  ஆகிய 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும். இவற்றில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டம் தவிர மீதமுள்ள 5 திட்டங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, இவற்றில் திண்டிவனம் - திருவண்ணாமலை,  ஈரோடு- பழனி உள்ளிட்ட 5 திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2019-ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை அறிவித்தது. அதைக் கடுமையாக எதிர்த்து மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் தான் உண்டு.

 

2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு மட்டும் தான் ரூ.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள எட்டு திட்டங்களுக்கு தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 16.04.2022 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 21-ஆம் தேதி தெற்கு தொடர்வண்டித்துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சந்தித்து தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பா.ம.க. மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது.

 

அதே நேரத்தில் தமிழகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள 9 புதிய பாதை திட்டங்களை செயல்படுத்த, அவற்றுக்கான தொடக்ககால மதிப்பீடுகளின்படி ரூ.7,910 கோடி தேவை. இந்த மதிப்பு இப்போது ரூ.10,000 கோடியை கடந்திருக்கும். ஆனால், அதில் 11% அளவுக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக தருமபுரி - மொரப்பூர் புதிய பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அதிக நிதி தேவைப்படும்.

 

அதுமட்டுமின்றி, சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய 3 முக்கிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த 3 திட்டங்களும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்தபோது அறிவிக்கப்பட்டவை. சென்னை-மாமல்லபுரம்-கடலூர் பாதை கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை அமைக்கவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி பாதை சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக இருக்கும். அதனால் இந்தத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

 

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் தான் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் தொடர்வண்டித் திட்டங்கள் கிடைத்தன. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புதிய திட்டங்களும் வரவில்லை; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதனால், தொடர்வண்டிப்பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள்ளாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்து உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.