கடந்த மூன்று வாரங்களாக கர்நாடகத் தேர்தலையொட்டி உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவித்து வந்தன. கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக் கடந்த 20 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் லிட்டருக்கு 21 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை ரூ.69.79 ஆகவும் உள்ளது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு டீசல் விலை புதிய உச்சத்தையும், பெட்ரோல் விலை 56 மாதங்களில் இல்லாத அளவிற்கும் உயர்ந்துள்ளது.
கர்நாடக தேர்தலுக்காக தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால் இதற்கு முன் 2017 டிசம்பர் மாதத்தில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போதிலும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 வரை குறைத்து, பின்பு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.