
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இந்த 34 வகையான கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டீ கடைகள் (பார்சலுக்கு மட்டுமே அனுமதி), உணவகங்கள் (பார்சலுக்கு மட்டுமே அனுமதி), பேக்கரிகள் (பார்சலுக்கு மட்டுமே அனுமதி), பலசரக்கு கடைகள், பெட்டிக்கடை, சாலையோர தள்ளுவண்டி கடைகள், அயர்னிங், ஜெராக்ஸ் கடைகள், டிவி விற்பனை, டிவி பழுதுபார்க்கும் கடைகள், இரு சக்கர, நான்கு சக்கர பழுதுபார்க்கும் கடைகள், நாட்டு மருந்து கடைகள், மொபைல் கடைகள், மொபைல் பழுது நீக்கும் கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து கடைகள், ஆட்டோமொபைல் கடைகள், நர்சரி, சிமெண்ட் கடைகள், ஹார்ட்வேர்ட் உட்பட 34 வகையான தனி கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சலூன்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஊரகப் பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகை கடைகள் மற்றும் சிறிய ஜவுளி கடைகளைத் திறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட 34 வகை கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.