Skip to main content

திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஐ.பி. பரிந்துரை செய்த வேலுச்சாமி!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதில் தி.மு.க. போட்டி போடும் 20 தொகுதிகளில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியும் அடக்கம். இந்த திண்டுக்கல் தொகுதிக்கு சீட் கேட்டு 20க்கும் மேற்பட்ட உ.பி.க்கள் விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலிலும் கலந்து கொண்டனர். 

 

d

 

அதன் அடிப்படையில் தி.மு.க. சார்பில் யாரை களமிறக்கினால் வெற்றி பெற முடியும் என கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார், நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையும், கட்சி பலத்துடன் பொதுமக்கள் மற்றும் சமூக பலமும் உள்ள ஒரு வேட்பாளரை நிறுத்தினால்தான் இத்தொகுதியை தக்க வைக்க முடியும். அதன் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த வேலுச்சாமியை வேட்பாளராக கொண்டு வரலாம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் கழக தலைவர் ஸ்டாலினிடம் வேலுச்சாமியை வேட்பாளராக போடச்சொல்லி ஐ.பி. பரிந்துரை செய்து இருக்கிறார். அதன் பேரில் தான் தலைவர் ஸ்டாலின் திண்டுக்கல் தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக வேலுச்சாமியை நாளை அறிவிக்க இருக்கிறார். 

 

d

 

இந்த ஜவ்வாதுப்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி கொங்குவெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். ஆனால் மற்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் புதுமுக வேட்பாளராகத்தான் களமிறங்க இருக்கிறார். அதுபோல் வேலுச்சாமியின் குடும்பம் பாரம்பரியமாகவே தி.மு.க. குடும்பம் 30 வருடங்களுக்கு மேலாக வேலுச்சாமியும் கட்சியில் இருந்து வந்தார். இவருடைய மனைவி பெயர் பரமேஸ்வரி இவர்களுக்கு நவீன் என்ற மகனும், சுஸ்மா என்ற மகளும் இருக்கிறார்கள்.

 

கடந்த 2016ல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வேலுச்சாமி மனுத்தாக்கல் செய்தும் கூட தேர்தல் ரத்தானதால் போட்டி போட முடியவில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்து தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கலந்து கொண்டு கட்சி பணியாற்றியும், கட்சிக்கு நிதி கொடுப்பதிலும் முக்கிய பங்காக இருந்து வருகிறார். அதுபோல் கட்சிக்காரர்களை அரவணைத்து போகக்கூடியவராகவும் தொகுதியில் செயல்பட்டு வருகிறார். அதுபோல் வேலுச்சாமியின் மாமனார் சண்முகம் வளையபட்டி பஞ்சாயத்து இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தி.மு.க.வில் ஊராட்சி செயலாளராகவும் இருந்து வருகிறார். அதுபோல் ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியவர்கள் உறவினராகவும் வேலுச்சாமி இருந்து வருகிறார். 

 

i

 

இப்படி வேலுச்சாமி குடும்பம் மட்டும் அல்ல உறவினர்களும் ஆரம்பகாலத்தில் இருந்து தி.மு.க.வில் இருந்து கொண்டே ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருந்து கொண்டு கட்சியை வளர்த்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமிக்குத்தான் ஐ.பி. பரிந்துரையின் பேரில் தலைவர் ஸ்டாலின் சீட் கொடுத்து இருக்கிறார். இதைக்கண்டு இப்பவே தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புக்கள், தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் தி.மு.க. வசம் இருப்பதால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் மூலம் திண்டுக்கல் எம்.பி. தொகுதியையும் கைப்பற்றி தி.மு.க. கோட்டையாக்க உருவாக்க உடன்பிறப்புக்கள் தயாராகி வருகிறார்கள்!


 

சார்ந்த செய்திகள்