
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர். மேலும், உள் நோயாளியாக 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களோடு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 500க்கும் அதிகமான மாணவ மாணவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுநீரை 20 ஆண்டுகளாக அருகே உள்ள சப்தலிபுரம் கிராம ஏரியில் கலக்கவிடப்படுவதாகவும் இதனால் சப்தலிபுரம் கிராமத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் சப்தலிபுரம், பென்னாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் பாதிப்பால் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்களால் அவதிப்படுவதாக கூறி சப்தலிபுரம் கிராம மக்கள் மற்றும் பொன்னுத்தூர் கிராம மக்கள் 150-க்கு மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அடுக்கம்பாறை மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை நிர்வாகமும், வேலூர் தாலுகா காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றார்.