விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ’’நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவும் எதிர்கட்சிகளின் வலியுறுத்தலாலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கே எமது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றிபெற்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் என உறுதியாக நம்புகிறோம்.
திருபரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் தள்ளிப்போட்டது. ஆனால், இப்போது தேர்தலை நடத்துமாறு அது உத்தரவிட்டுள்ளது. காலதாமதம் ஆனாலும் கூட தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வரவேற்க தக்கதாகவே உள்ளது.
நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 19 தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு அதை நடத்தாமல் தனியே நடத்துவது ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்கு உதவி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது. இத்தகைய நம்பகத்தன்மையற்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இனிமேல் ஈடுபடாது என நம்புகிறோம்.
ஏனைய தொகுதிகளில் பணியாற்றுவதை போலவே இந்த நான்கு தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளும் பிற தோழமை கட்சிகளும் முனைப்போடு பாடாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.