மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதில் வட இந்தியாவைப் பொருத்தவரை காசி, தென்னிந்தியாவைப் பொருத்தவரை ராமேஸ்வரம். அதற்கடுத்து திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்தான். தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தர்பணம் கொடுப்பதற்காக அம்மா மண்டபத்தைத் தேடி இன்றும் பலர் வருகைபுரிகின்றனர். இந்நிலையில், கரோனா பேரலையால் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பலர் காத்துக்கிடந்தனர்.
கரோனா நோய்த் தாக்கம் தற்போது குறைந்து காணப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த திங்கட்கிழமை (05.07.2021) முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஆனி அமாவாசையையொட்டி அம்மா மண்டபம் காவிரி கரையில் தங்களுடைய மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலையிழந்து காணப்பட்ட அம்மா மண்டபத்தில் மக்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
11 மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் அந்த மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில், திருச்சி மாவட்டத்திற்குத் தளர்வு அறிவிக்கப்பட்டு, தற்போது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பொதுமக்கள் இப்படிக் கூடியிருப்பது நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதனை முறைப்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.