சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளை துணை ராணுவ படையினர் மிரட்டிய சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் ஏறினர். அங்கிருந்த பயணிகளிடம் தாங்கள் பணிகளை முடித்துவிட்டு திரும்புவதால் தங்களுக்காக இந்த முன்பதிவில்லாத பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ரயில் கிளம்பிய உடன் மது அருந்திய துணை ராணுவ படையினர், சீட்டு விளையாடுவதோடு அதிக கூச்சல் எழுப்பி அங்கிருந்த பயணிகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் தட்டி கேட்டபோது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ராணுவத்தினர் மதுபோதையில் துப்பாக்கியை எடுத்துக்காட்டி மிரட்டியதாகவும், ஒருவரை காலணியால் அடித்து தாக்கியதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது பயணிகள் அவசர செயினை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதன் பின்னர் கீழே இறங்கிய பணிகள் இது குறித்து கேட்ட பொழுது துணை இராணுவத்தினர் அங்கிருந்த பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கையிலிருந்த மது பாட்டில், காலணி ஆகியவற்றைக் கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. மக்களை காக்க கூடிய ராணுவ வீரர்களே இப்படி பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.