செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் - GST சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, வாகன சேவையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிகழ்வில் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனை விமர்சித்து அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஐந்து பேருக்குமேல் பொது இடத்தில் கூடக்கூடாது என்ற சாமனிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்ற நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.
கரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அ.தி.மு.க. தொண்டர்களைப் பற்றி முதலமைச்சருக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா? மேடைக்கு மேடை, 'தனி மனித இடைவெளி அவசியம்', 'அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம்', ‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கரோனாவை ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் வசனம் பேசி வரும் முதலமைச்சர். அவ்வாறு மக்கள் கூடக்கூடாது என 144 தடைச்சட்டம் போட்ட முதலமைச்சர், தானே பொதுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தான் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன்? சட்டதிட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? தமக்கு பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொளிக்காட்சி வழியாக நடத்திவிட முடியாதா?
அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் போடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.