
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்கள், பாராளுமன்றம் மற்றும் டெல்லி மேல்-சபை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாராளுமன்ற விவகாரங்கள் துறை, தேசிய இ-விதான் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த இ-விதான் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வழியில் அளிக்கப்படும். இ-விதான் இணையதளத்திலும் பாராளுமன்றம், டெல்லி மேல்- சபை உள்பட அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்பட்டு இருக்கும்.
தமிழக சட்டமன்றத்தில் இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டசபை செயலகம் தீவிரமாக எடுத்து வருகிறது. இதையொட்டி அதிகாரிகள், அலுவலர்களுக்கு சட்டசபை குழு கூட்ட அறையில் இன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதை சபாநாயகர் ப.தனபால் தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபை அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி டெல்லியில் நடத்தப்பட உள்ளது. இ-விதான் திட்டத்தை பயன்படுத்தும் முறை பற்றி பின்னர் எம்.எல்.ஏ.க் களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டசபையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விவாதங்களையும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வாய்ப்புள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு கையடக்க லேப்- டாப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.