
பொருந்தலாறு அணையில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 25/10/2020 முதல் 03/03/2021 முடிய 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கனஅடி வீதம் மொத்தம் 224.64 மி.க.அடிக்கு மிகாமல் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்” இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.