இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது இதன் பொறுப்பு தலைவராக விஜய பாரதி சயானி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியான ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக நியமித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராகப் பதவியேற்க உள்ள ராமசுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். இவர் பல்வேறு வழக்குகளை விசாரித்து அதிரடி தீர்ப்புகள் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவிக்குத் தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதியரசர்(ஓய்வு) வி. ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு எனது அகமகிழ்ந்த நல்வாழ்த்துக்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர், அரசியல் சட்ட அமைப்பின் உயரிய பொறுப்பு ஏற்பது நம் மாநிலத்திற்கே பெருமை”எனக் குறிப்பிட்டுள்ளார்.