Skip to main content

“மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது” - இ.பி.எஸ். கண்டனம்

Published on 25/12/2024 | Edited on 25/12/2024
Palaniswami condemns incident of misbehaved of  student Anna University

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று கல்லூரி வளாகத்திலேயே இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது.

டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலினின் திராவட மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம். பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்