திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் ஜெகதீசன். இவர்களது இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவர் மீது கடந்த மாதம் 2 ஆம் தேதி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மாலதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என யுவாராஜாவிடம் காவல் ஆய்வாளர் மாலதி ரூ. 5000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். மேலும், அதனை இன்று காலை காவல்நிலையம் வந்து தன்னிடம் கொடுக்குமாறும் தெரிவித்திருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில், யுவராஜாவிடமிருந்து இன்ஸ்பெக்டர் மாலதி 5000 லஞ்சமாகப் பெற்றபோது இன்று (13.12.2022) காலை 10 மணி அளவில் கையும் களவுமாகப் பிடிபட்டார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் மாலதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.