சேலம் அருகே, காவல்துறை அதிகாரி என்று கூறி வியாபாரியிடம் 50 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (37). இவர், செங்காந்தள் மலர் விதைகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு இவரிடம் பேசிய மர்ம நபர்கள், பழைய ரூபாய் தாள்களுக்கு 10 சதவீத கமிஷனுடன் புதிய பணத்தாள்கள் வழங்கப்படும் என்றும், சேலத்தில் அதற்கான வாடிக்கையாளர் இருக்கிறார் என்று கூறியும் அழைத்துள்ளனர்.
இதைய நம்பிய வெங்கடேஷ், வியாபாரத்திற்கு வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அவரை வரவேற்ற மர்ம நபர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள ராஜேஷ் என்பவர்தான் வாடிக்கையாளர் எனக்கூறி காரில் அழைத்துச் சென்றனர்.
தொலைவில் இருந்தே ராஜேஷின் வீட்டைக் காட்டி, அவரிடம் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது ராஜேஷ், தான் ஒரு வேலையாக இருப்பதால், தன்னுடைய ஊழியர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் புதிய ரூபாய் தாள்களும், கமிஷன் தொகையும் அனுப்பி வைக்கிறேன். அவரிடம் பழைய ரூபாய் தாள்களை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இரும்பாலை பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து, வெங்கடேஷின் காரை வழிமறித்தனர். அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் காக்கி சீருடையில் இருந்தார். தன்னை காவல்துறை அதிகாரி என்று கூறிய அவர், காரில் கருப்புப்பணம் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் வந்ததாகக் கூறினார்.
மேலும், வெங்கடேஷ் கொண்டு வந்த 50 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு, தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராகிவிட்டு, பணத்தை பெற்றுச் செல்லும்படி கூறினார். அதன்படி, வெங்கடேஷ் தாரமங்கலம் காவல்நிலையத்திற்குச் சென்று விசாரித்தபோது தன்னிடம் பணம் பறித்துச்சென்ற கும்பல் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் இரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வெங்கடேஷிடம் பழைய ரூபாய் தாள்களை புதிய பணமாக மாற்றித் தருவதாகச் சொன்ன கும்பல்தான் காவல்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு ஆள்களை வைத்து பணம் பறித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, வெங்கடேஷூடன் ஒரே காரில் எதுவுமே தெரியாதது போல அமர்ந்து இருந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தாராபுரம் காலிபாளையத்தைச் சேர்ந்த மோகன்பாரதி (26), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வினித்குமார் (27), அருப்புக்கோட்டை சின்னசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முத்துமணி (30), காங்கேயம் சின்னாயிபுதூரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (24), சிவகாசி திருத்தங்கல் சாலையைச் சேர்ந்த கணேசன் (58), ஒட்டன் சத்திரம் கே.கீரையானூரைச் சேர்ந்த குமார் (41) ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட, ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர், பழைய பணத்திற்கு புதிய பணத்தாள்களை தருவதாக இருந்த ராஜேஷ் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.