தமிழ் மக்களின் கடவுள் என்றால் அது முருகப்பெருமான் என்ற நம்பிக்கை மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அந்த முருகனின் மனைவியான வள்ளியின் பூர்வீகம் சேலம் மாவட்டம் எடப்பாடி என்றும் முருகன் எடப்பாடிக்கு மருமகன் எனவும் அவ்வூர் மக்களால் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.
தைப்பூச திருவிழா என்றாலே பழனி மலை முருகன் தான் எல்லோருக்கும் நினைவில் வரும், ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதில் இருந்தும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு சென்று வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் குடும்பமாகவும், தனியாகவும் பழனிக்கு பாத யாத்திரை சென்று வருகிறார்கள். முருகன் எடப்பாடி மக்களுக்கு மருமகன் என்ற நம்பிக்கை உள்ளதால் தைப்பூசத்திற்கு பிறகு பழனியில் எடப்பாடி காவடி தான் ஸ்பெஷல்.
இந்நிலையில் இன்று (10/02/2020) எடப்பாடியில் இருந்து பழனிக்கு புறப்படும் முருக பக்தர்கள் ஈரோடு வழியாக மயில் காவடி எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக சென்றனர். இதில் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என்று எடப்பாடி காவடி எடுத்துக் கொண்டு முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.