தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பெய்த தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 38 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் 30 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 5 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 13 ஏரிகள் 75 சதவீதமும், 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நீர் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
நேற்று பெய்த கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நீர் அகற்றப்பட்டதால் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் இன்று வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்காடு, நீலகிரி, சேரன் உள்ளிட்ட விரைவு ரயில் வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். திருவனந்தபுரம், மங்களூர், மும்பை, பாலக்கோட்டில் இருந்து சென்ட்ரலுக்கு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட இருக்கிறது. அதேநேரம் கர்நாடகா மைசூர்- சென்னை சென்ட்ரல் வரும் காவிரி விரைவு ரயில்கள் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், சீரடி செல்லும் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் பேருந்துகள் அனைத்து வழித்தடத்திலும் இன்று வழக்கம்போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.