
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் இன்று (24/04/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றித் துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக்கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.
2006- ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ்மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக கற்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. எனினும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய்மொழியையும், விருப்பப்பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழி பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.