தமிழகத்தில் ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயா்வை நினைத்து பெருமூச்சு விடுவதற்குள் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.80க்கு விற்ற நிலையில், இன்று விலை ரூ.150 வரை மாவட்டத்திற்குத் தகுந்தாற்போல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை ரூ.60 வரை உயா்ந்துள்ளது.
இந்த விலை உயா்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலை இருக்கும் போது, இந்த விலையேற்றம் பலரை பாதிப்படையச் செய்துள்ளது. 60 நாள் பணப் பயிரான சின்ன வெங்காயம் பெரம்பலூர், துறையூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பயிரிடப்படுவது அதிகம். தற்போது பெய்த கனமழையால் வெங்காயப் பயிர்கள் அழுகியது. இதனால், சந்தைக்கு வெங்காயம் விற்பனைக்கு வரத்து இல்லாமல் போனது. இதனால், தற்போது விலை அதிகரித்துள்ளது.
மற்றொரு பக்கம், கடந்த மாதம் 2 டன்னுக்கும் அதிகமான வெங்காயத்தை பெரம்பலூர் பகுதியின் மொத்த வியாபாரி ஒருவா் கோழிப் பண்ணையில் பதுக்கி வைத்து இருந்தார். அதனை அறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா். இப்படி அத்தியாவசியப் பொருட்கள் இயற்கை சீற்றத்தினால் அழிவதும் வியாபாரிகளின் பதுக்கல் சம்பவங்களும் பொதுமக்களை வருத்தமடையச் செய்துள்ளது. வழக்கமாக திருச்சி வெங்காய மண்டிக்கு தினசரி 300-400 டன் வெங்காயம் வரும் சூழலில் தற்போது 30டன் வெங்காயம் மட்டுமே வரத்து இருக்கிறது.
திருச்சியிலிருந்து 8 மாவட்டத்திற்கு வெங்காயம் சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில், வெங்காயம் இல்லாததால் தற்போது வந்துகொண்டிருக்கும் பெரிய வெங்காயத்தை சப்ளை செய்து சமாளிப்பதாகவும், அதிக விலையென்பதால் சில்லறை வியாபாரிகள் வாங்குவதில்லை என்றும் வெங்காய வியாபாரிகள் கூறுகின்றனா்.