மன்னார்குடியில் கஜாபுயலால் சேதமான மின்கம்பங்களை சரிசெய்து மின்விநியோகம் செய்யவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு அரசுத்துறையினர் யாரும் வரவில்லை என்றும் கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த 16-ஆம் தேதி வீசிய வரலாறுகாணாத அளவில் வீசிய கஜாபுயலினால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கண்ணில் பட்ட மரங்கள், வீடுகள், மின்கம்பங்களை சாய்த்துவிட்டே சென்றிருக்கிறது கஜா. முன்னெச்சரிக்கையோடு தயாராக இருக்கிறோம் என்று பீத்திக்கொண்ட அதிமுக அரசு விழிபிதுங்கி தவித்துவருகிறது.
இந்தநிலையில் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளன. அதனை சரி செய்ய பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மின்வாரியத்துறை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அவரகள் மன்னார்குடி நகரபகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் கிராமபுறங்கள் இரண்டு வாரங்களாக இருண்டே கிடக்கிறது. பணிகள் துவங்கவே மேலும் சில நாள்கள் ஆகலாம் என மின்வாரியப் பொறியாளர்கள் தெரிவித்ததால் கோபமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.