ஓராண்டுக்கு மேலாக விரிசல் ஏற்பட்டு பயன்பாடற்ற நிலையில் இருக்கும் நாகை புத்தூர் ரயில்வே மேம்பாலத்திற்கு மலர்வளையம் வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர் முக்குலத்து புலிகள் அமைப்பினரும் பொதுமக்களும்
நாகப்பட்டினம், தூத்துக்குடி கிழக்குக்கடற்கரை சாலையில், நாகையை அடுத்துள்ள புத்தூரில் அமைந்துள்ளது நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டிக்கான ரயில்வே மேம்பாலம். 2011 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மிகவும் தாமதமாக 2013 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிற்கும், மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
நாகை, திருவாரூர், தஞ்சை மார்க்கத்தில் ரயில்கள் செல்லும் போது, நாகை வேளாங்கண்ணி சாலை மார்க்கத்தில் பயணிக்கும் புத்தூர் ரயில்வே கேட் போடப்படுவதால், வாகனங்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து கூட்டநெரிசலுக்கு ஆளகியது, அதோடு திருவாரூர், நாகை சாலையும் ஸ்தம்பித்து போகும் நிலையே இருந்தது. அதற்கு இந்தப் பாலம் மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது. அதோடு இந்தப்பாலத்தின் மூலம் கிழக்குக்கடற்கரை சாலைவழியே தொலைதூரபயணம் மேற்கொள்ளும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கான முக்கியபோக்குவரத்துத் தடமாகவும் விளங்கியது.
இந்தநிலையில் மேம்பாலத்தின் மேல்தள இணைப்புகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தியது.மேலும் வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் இடைவெளி அதிகரிக்கிறது என்றும், வாகனங்கள் செல்லும் போது, அதிக அதிர்வு ஏற்படுவதாகவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் பொதுமக்களிடமும். போக்குவரத்து ஓட்டுனர்கள் மத்தியிலும் சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆனால், அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ விழிப்புணர்வோ, பாதுகாப்போ ஏற்படுத்தாமல் விட்டுவிட்டனர். அதன் விளைவு 2017-ஆம் ஆண்டு மார்ச் 25 தேதி வாக்கில் புத்தூர் ரயில்வேமேம்பாலத்தின் வடப்புற பகுதி இணைப்பில் இடைவெளி அதிகமாகி சுமார் அரை அடி அகலத்துக்கும் அதிகமான அளவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், மார்ச் 25-ஆம் தேதி இரவு முதல் இந்தப் பாலம் வழியேயான வாகனப் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டது.
பிறகு பாலத்தை சீரமைக்கும் பணிக்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத் துறையினர் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கொண்டனர். இடைவெளி மிக அதிகமாகியிருந்த ஒரு எக்ஸ்பேன்சன் இணைப்பில், இடைவெளியைக் குறைக்கவும், இடைவெளி அதிகமாகாமல் தடுக்கவும் இரும்புப் பட்டைகளை பொருத்தினர் ஆனால், அந்த முயற்சி உரிய பயனை தரவில்லை. அதன் பிறகு பாலத்தின் இரண்டு புறமும் அடைத்து பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனர்.
இந்த நிலமையில் பாலத்தை உடனே சரி செய்யவேண்டும் என முக்குலத்துப்புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு சரவணன் தலைமையில் பாலத்திற்கு மலர்வளையம் வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஆறு சரவணன் கூறுகையில், ‘’புத்தூர் மேம்பாலம் பிரதானமானது கிழக்கு கடற்கரையில் செல்லும் பயணிகளுக்கு மட்டுமின்றி, வேதாரண்யம், கோடியக்கரை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுளா பயணிகளின் பிரதான பாலமாகவும் இருக்கிறது. ரயில் வரும் போது புத்தூர் கடைவீதியே டிராபிக்கால் நிலைகுளைந்துவிடுகிறது, இந்த பாலம் மாவட்டத்தின் தலைநகரில் இருந்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, அதோடு மாவட்டத்தின் அமைச்சரான ஒ.எஸ்.மணியனின் சொந்த ஊருக்கு செல்லும் பாலமும் இதுவாக இருந்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதோடு பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலமானது 10 ஆண்டுகளுக்கு கூட பயன்படவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.’’ என்கிறார்.
நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரோ, ‘’ புத்தூர் பாலம் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 2 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்புப் பணிகளும், ரூ. 2 கோடி மதிப்பில் அணுகு சாலை சீரமைப்புப் பணிகளுக்காகவும் திட்டமிடப்பட்டுப்பணிகள் தொடங்கப்பட்ட உள்ளன. பணிகளை நிறைவேற்ற 6 மாத காலம் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ’’ என்றார்.