வேலூர் கோட்டைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காக கோட்டை நுழைவு வாயில் காவலர்கள் கண்காணிப்பு கூண்டு அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் கோட்டைக்கு வந்து, செல்பவர்களை கண்காணித்து வருகின்றனர். ஆனாலும், கோட்டைக்குள் மது குடிப்பது, கஞ்சா அடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், விடுமுறையான நேற்று (13.08.2023) மாலை வேலூர் கோட்டையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாலிபர்களும், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என கோட்டையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், வேலூர் கோட்டை கொத்தளம் அருகே சுற்றிப் பார்க்க வந்த வாலிபரிடம், கஞ்சா போதை ஆசாமி செல்போன் பறித்து, கொண்டு அந்த இளைஞரை 10 அடி உயரத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவலர்கள் தமிழரசு மற்றும் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு படுகாயமடைந்த வாலிபரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, போதை ஆசாமி தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கஞ்சா போதை ஆசாமி கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு வந்த தமிழரசு, பாலாஜி ஆகிய காவலர்கள் போதை ஆசாமியைப் பிடிக்க முயன்ற போது போதை ஆசாமி திடீரென உடைந்த காண்ணாடி துண்டுகளால் இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கை, காலில் சராமாரியாக கிழித்துள்ளார். இதில் படுகாயமடைந்த 2 காவலர்கள் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் போதை ஆசாமியைப் பிடித்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த முபராக்(34) என்பதும், இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறையினர் கைதான முபாரக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகரின் முக்கிய பகுதியில் கஞ்சா போதையில் இருந்த ஆசாமி இரண்டு காவலர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.