அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வயதான தம்பதியரைக் கொலை செய்து புதைத்த ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ தங்க நகைகள், 50 கிலோ வெள்ளி நகைகள், 3 லேப்டாப், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது குறித்து வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன், "மயிலாப்பூரில் உள்ள வீட்டில் முதிய தம்பதி தனித்தனியாக கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட முதிய தம்பதி ஸ்ரீகாந்த் (வயது 58)- அனுராதா (வயது 53). ஸ்ரீகாந்த் ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். முதிய தம்பதியைத் திட்டமிட்டு கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தம்பதியை மயிலாப்பூரில் கொலை செய்து அவர்களது நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் சடலங்களைப் புதைத்துள்ளனர். ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் ஓட்டுநர் கிருஷ்ணாவின் தந்தை பல ஆண்டுகளாக காவலாளியாகப் பணிபுரிகிறார்.
ஸ்ரீகாந்த் வீட்டில் ரூபாய் 40 கோடி இருப்பதாகக் கணித்து அதைக் கொள்ளையடிக்கவே இருவரும் திட்டமிட்டுள்ளனர். கொலை செய்து விட்டு நேபாளம் தப்பிச் செல்வதே இருவரின் திட்டம்; அதற்குள் காவல்துறையினர் விரைவாகச் செயல்பட்டனர். வீட்டின் சிசிடிவி கேமரா, அதன் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பண்ணை வீட்டில் உள்ள தம்பதியின் சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.