தமிழ் கடவுள் ஆன பழனி முருகன் சன்னிதானத்தில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். இப்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், வெளிநாட்டினருக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தனித்தனியாக சாப்பாடு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் வெளிநாட்டினர்களுக்கும், முக்கிய விஐபிகளுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் முக்கியத்துவம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சாப்பிட செல்லும் பொதுமக்களும் முருக பக்தர்களும் நீண்ட நேரம் சாப்பாட்டு அரங்குக்குள் செல்ல முடியாமல் வெளியில் நின்று வந்தனர். அதோடு சில இடங்களில் பை சிஸ்டம் மூலம் முருக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் சாப்பாடுகளும் போடப்பட்டு வந்தது. ஆனால், அதுவும் சரிவர கிடைக்கவில்லை. இதனால், உணவருந்த வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் உணவு அருந்தும் அறைக்குள் செல்ல முடியாமல் வாசல் முன்பு நின்றிருந்தனர். அதைக் கண்ட விழா குழுவினர்கள் சிலர் பொதுமக்களையும், பக்தர்களையும் அறைக்குள் நுழைய விடாமல் தடுத்தும் அவர்களை தள்ளியும் விட்டனர். இதனால் கூட்டத்திலிருந்து சில குழந்தைகளும், பெண்களும் கீழே விழுந்தனர்.
அதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள் கோயில் ஊழியர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்குள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் அளவுக்கு வந்துவிட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த ஊழியர்களை சத்தம் போட்டனர். அதன் பின் காத்திருந்த பொதுமக்களும் முருக பக்தர்களும் சாப்பாட்டு அறைக்குள் சென்றனர். அப்படி இருந்தும் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து தான் சாப்பிட்டுவிட்டு சென்றனர். ஆயிரக்கணக்கான முருக பக்தர்களும், பொதுமக்களும் மாநாட்டுக்கு வந்து அன்னதான சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் என்று தெரிந்தும் கூட இந்த விஷயத்தில் அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் விட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.