Skip to main content

காவலர் தேர்வை நடத்தாததை கண்டித்து அரசாணை நகலுக்கு மலர்தூவி, சங்கு ஊதி  நூதன ஆர்ப்பாட்டம்! 

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

the non-conduct of the police examination!

 

 

புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு கடந்த பத்தாண்டுகளுக்கு பிறகு  2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது இத்தேர்வில் வயது வரம்பு தொடர்பாக தளர்வு கேட்டு தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும்  நீதிமன்றத்திலும்  வழக்கு நடத்தப்பட்டு வயது வரம்பு தளர்வுக்கு அனுமதிக்கப்பட்டது.  அதையடுத்து 390 காவலர் பணியிடங்களுக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் காவலர் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இதுநாள் வரையில் காவலர் தேர்வு நடத்தவில்லை.

 

இந்நிலையில் காவலர் தேர்வு நடத்தாததை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு புதுச்சேரி  மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு சுவாமிநாதன், பொதுச் செயலாளர் முருகன், சிலம்பரசன், அபிநயன், வேல்முருகன், புவியரசன், தமிழ்ச்செல்வன் தமிழ்வேந்தன், வினோத்  மற்றும் புதுச்சேரி நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், செல்வகுமார்,  மக்கள் நல்வாழ்வு இயக்கம் ராஜா, இந்திய தேசிய மக்கள் முன்னணி கலைப்பிரியன், புதுச்சேரி மக்கள் எழுச்சி பேரவை வேல்முருகன், அரசியல் களஞ்சியம் சீனு கந்தகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுபற்றி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கூறுகையில்,  "காவலர் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. வயதுவரம்பு தொடர்பாக தளர்வு கேட்டு எங்கள் அமைப்பு சார்பாக  தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும்  நீதிமன்றத்திலும்  வழக்கு நடத்தப்பட்டு வயது வரம்பு தளர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. 

 

இந்த நிலையிலும் இதுநாள்வரையில் தேர்வு நடத்தவில்லை.  பின் வரும் காலம் பருவமழை காலம் என்பதால் இதற்கு மேலும் காலம் தாழ்த்தினால் மைதானத்தில் தேர்வு நடத்துவது சாத்தியமாகாது. காவலர் தேர்வு  அறிவித்த ஆறு மாதங்களில் நடத்த வேண்டும். ஏனென்றால் தேர்வில் விண்ணப்பிக்க கூடியவர்கள் தங்களது திறமையை எழுத்தின் மூலமாக மட்டுமல்லாமல் மைதான தேர்விலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது விண்ணப்பித்த போது 50 கிலோ எடையில் இருந்த இளைஞர்கள் இரண்டாண்டுகளில் உடல் தகுதியை இழந்த சூழல் உருவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து மைதான தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை காவலர் தேர்வு நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு பின்னணியில் துணைநிலை ஆளுநர் அவர்களின் சதி இருக்கிறதோ என்ற சந்தேகம் எமது அமைப்புக்கு இருக்கிறது.

 

ஏனென்றால் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் காவலர் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு கூட்டங்கள் நடத்தியும்,  காவலர் தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என பலமுறை ஆணையிட்டும் கூட இதுநாள் வரை தொடர்ந்து காவலர் தேர்வு நடத்தாமல் காலம் தாழ்த்தியதற்கான காரணம் புரியவில்லை.  வயதுவரம்பு கேட்டு இளைஞர்கள் போராடியபோது மேதகு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் அந்த வயது வரம்பை தளர்வு தரமாட்டேன் என உறுதியாக இருந்தார்.  நீதிமன்றமும்,  உள்துறை அமைச்சகமும் தலையிட்டு வயது வரம்பு தளர்வு ஏற்படுத்தி கொடுத்தது இதன்காரணமாக துணைநிலை ஆளுநர் திட்டமிட்டு இந்த மாநில அரசு இந்த தேர்வை நடத்தி விடக்கூடாது என்பதற்காக தலைமை செயலர்,  காவல்துறை உயரதிகாரிகளை தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தி காவலர் தேர்வு நடத்தாமல் இழுத்தடிக்கின்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்குள் இருக்கிறது.

 

எனவே எங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக இன்று காவலர்தேர்வு அறிவித்த இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக சங்கு ஊதி, மணியடித்து மலர் அஞ்சலி செலுத்தி உள்ளோம். உடனடியாக தேர்வு நடத்தாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்"  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்