தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படுவது தொடர்பாக பலமுறை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாத காலமாக பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாததால் மின்தடை ஏற்படுகிறது என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் அணில் போன்ற உயிரினங்கள் மரக்கிளைகள் வழியாக மின்கம்பிகளில் ஏறி இரண்டு கம்பிகள் உரசிக்கொள்வதால் மின்தடை ஏற்படுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். அணில் குறித்து அவர் அளித்த விளக்கங்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் சில நாட்களாக மின்தடை பிரச்சினை தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக சமூக வலைதளங்களில் பொத்தாம் பொதுவாக பதிவிடக் கூடாது. மின் இணைப்பு எண்ணுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியத்தில் ஏதேனும் குற்றம் சொல்ல முடியாதா என பூதக்கண்ணாடி வைத்து பார்க்கின்றனர்'' என்றார்.