நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றியவரை என்எல்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இது சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக பல்வேறு கிராம விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்படி நிலம் கொடுத்தவர்களுக்கான ஒதுக்கீட்டின்படி, சதாசிவம் என்பவருக்கு 1989ம் ஆண்டு என்எல்சியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக பணி செய்து வந்த சதாசிவத்தை என்எல்சி நிர்வாகம் 2014ல் விதிமுறைகளை மீறி நிலம் கொடுத்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றுள்ளார், என்எல்சிக்கு நிலம் கொடுத்த ராஜா கண்ணு என்பவரின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் அல்ல சதாசிவம். எனவே அவரது பணி நியமனம் செல்லாது என்றுகூறி என்எல்சி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து சதாசிவம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு சதாசிவம் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சதாசிவம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் டி. கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவில், என்எல்சியில் வேலை கேட்டு சதாசிவம் விண்ணப்பிக்கவில்லை. சதாசிவத்தின் மாமனார் ராஜாக்கண்ணு அவர் நிலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மருமகன் சதாசிவத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கான ஒதுக்கீட்டின்படி என்எல்சி நிர்வாகம் பணி வழங்க முன்வந்துள்ளது.
ராஜாக்கண்ணு தனது உடல்நிலையை காரணம் காட்டி, மருமகன் சதாசிவத்துக்கு பணி வழங்க கேட்டதால் அவருக்கு என்எல்சி நிர்வாகம் பணி வழங்கியுள்ளது. உண்மையை மறைத்து பணிநியமனம் பெற்றார் சதாசிவம் என்பதற்கு என்எல்சி தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 24 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருந்துள்ளார் சதாசிவம். பணி நியமனத்தின்போது உரிய ஆவணங்களை நிர்வாகம் பரிசீலித்திருக்க வேண்டும். நிர்வாகத்தின் மீது உள்ள தவறுக்காக மனுதாரரை குற்றம் கூறமுடியாது. 54 வயதில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இது சதாசிவத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
எனவே வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சதாசிவம் மோசடி செய்யவில்லை. பணிநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, கட்டாய ஓய்வு திருத்தம் செய்யப்படுகிறது. அவருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதி அரசர் கிருஷ்ண குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.