



பேராசிரியை நிர்மலா தேவி குரல் பரிசோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றத்துக்காகக் அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியது தொடர்பாக அவருக்கு குரல் பரிசோதனை மேற்கொள்ள போலீஸார் முடிவு செய்தனர். மதுரையில் இதற்கான வசதிகள் இல்லாததையடுத்து அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள் நிர்மலா தேவியை குரல் பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்ல சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, அவர் மதுரை மத்திய சிறையில் இருந்து நேற்று காலை 9.30 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் புதன்கிழமை மாலை சென்னை வந்தடைந்தார். இதையடுத்து புழல் பெண்கள் மத்திய சிறை அடைக்கப்பட்டார். இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி குரல் பரிசோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.