சேலத்தில் மான் இறைச்சியுடன் சுற்றிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாநகர காவல்துறையினர் கோரிமேடு பகுதியில் ஜூலை 25ம் தேதி மாலை, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஓர் இன்னோவா கார் வந்தது. அதைப் பின்தொடர்ந்து பதிவு எண் இல்லாத ஜூபிடர் ஸ்கூட்டரில் ஒரு வாலிபரும் வந்து கொண்டிருந்தார். அவ்விரு வாகனத்தில் வந்தவர்களையும் காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறினர்.

அந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் ஒரு பாலிதீன் பையில் பச்சைக்கறி மற்றும் ஒரு விலங்கின் நான்கு கால்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவை மான் இறைச்சி மற்றும் கால்கள் என்பது தெரிய வந்தது. ஸ்கூட்டர் வாகனத்தை ஓட்டி வந்தவர், சேலம் அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் லோகநாதன் (25) என்பதும் தெரிய வந்தது. இன்னோவா காரின் பின்பக்க இருக்கை அருகே ஒரு பாலிதீன் பையிலும் அவர்கள் மான் இறைச்சியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ஓமலூர் மூங்கில்பாடியைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் லட்சுமணன் (30) என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கு வனத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சேலம் சரக வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு 72 மணி நேரத்திற்கு மேல் ஆனதால், துர்நாற்றம் வீசியது. அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக துர்நாற்றம் வீசாமல் இருக்க, வனத்துறையினர் இறைச்சி மீது ஃபினாயில் தெளித்து வைத்திருந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் (டிஎப்ஓ) பெரியசாமி கூறுகையில், ''பிடிபட்ட லோகநாதன் தனது ஸ்கூட்டர் வாகனத்தை அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் ஒன்றாக ஒரே காரில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யப்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு பேரிடம் இருந்து மான் இறைச்சியை விலைக்கு வாங்கி சேலத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இருவரிடம் இருந்து 14 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க சேர்வராயன் தெற்கு சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் மான் இறைச்சி விற்றவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வன விலங்குகள் சட்டம் 1972ன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.