ஒரு வருடம் கடந்தும், ஏதோ ஒருவிதத்தில் பேசப்படுவதாக நிர்மலாதேவி வழக்கு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறது. இன்று, நிர்மலாதேவி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களின் பெயர் ஏனோ வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசினார் என்பது விசாரிக்கப்படவில்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமாக விசாரணை நடத்தாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். அதனால், நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சுகந்தி கோரியிருந்த மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையானது, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 27-ஆம் தேதி இவ்வழக்கினை ஸ்ரீவி. மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரிப்பதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், நிர்வாக நீதிபதி சத்யநாராயணா மற்றும் புகழேந்தி கொண்ட அமர்வு இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் ‘சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. அதனால், இந்நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாகச் குற்றவாளிகளைச் சேர்த்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும், கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்திருந்த தடையையும் நீக்குகிறோம்.” என்று சுகந்தி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.