ஓய்வு பெற்ற பிறகு நலிவடைந்த நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஓய்வூதியத் தொகை 10 ஆயிரத்தில் இருந்து பன்னிரண்டாயிரம் ரூபாய் என உயர்த்தி அறிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்களுக்கு என ஓய்வூதியம் உட்பட பல்வேறு சலுகைகள் அரசு திட்டத்தில் இருந்தும் கூட அதைப் பெற முடியாமல் தத்தளித்த பத்திரிகையாளர்கள் நிறைய உள்ளனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நலிவடைந்த 41 பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மீது திமுக அரசு கொண்டுள்ள அதீத அக்கறை பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சம்பவம் நெய்வேலியில் நடைபெற்றது. நெய்வேலி பகுதியில் (தினத்தந்தி) பிரபல நாளிதழில் செய்தியாளராக பணி செய்து வந்தவர் ரமேஷ். இவர் பத்திரிக்கை பணியோடு அப்பகுதியில் நலிவடைந்த நிலையில் அரசு உதவி திட்டங்கள் கிடைக்காமல் தவித்த ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதற்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் களப்பணி ஆற்றியவர். பலருக்கும் நேரம் காலம் பாராமல் தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர். நல்ல மனம், மனித நேயம் கொண்ட ரமேஷ், மனைவி வசந்தி (வயது 48), மகள் சங்கீதா (வயது 18), மகன் சங்கர் (வயது 16) இவர்களுடன் பத்திரிக்கை பணியின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ரமேஷ் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இழப்பு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. வாழ்க்கையின் அடுத்தகட்டத்தில் எப்படி அடியெடுத்து வைப்பது என வழி தெரியாமல் திகைத்து திக்கற்று தவித்தனர். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று அவர்களுக்கு ஓடி வந்து உதவி செய்துள்ளனர் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வி.கணேசன் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்.
அமைச்சர் சி.வி.கணேசன் ரமேஷ் குடும்பத்தினருக்கு 25,000 ரூபாய் உதவித்தொகை வழங்கினார். அதேபோல் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் 25,000 ரூபாய் அளித்து உதவி செய்ததோடு ரமேஷின் பிள்ளைகள் படிப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டு படிக்க வைப்பதாக அறிவித்துள்ளார். இதே போல் ரமேஷ் குடும்பத்திற்கு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளார். இந்த நிகழ்ச்சி அருகிலிருந்த கட்சி முன்னோடிகள், பத்திரிகையாளர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. உழைக்கும் பத்திரிகையாளர்கள் நலிவடைந்து போனால் அவர்களை விட்டுவிட மாட்டோம்; ஆதரவு கரம் கொடுத்து காப்பாற்றுவோம் என்று இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் அமைச்சர் சி.வி.கணேசன், எம்எல்ஏ சபா ராஜேந்திரன், பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் உள்ளிட்டோர்.