தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (09.10.2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று (10-10-23), 2023-2014ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், “கோவை தெற்கு தொகுதியில் காந்திபுரம் மேம்பாலம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் எனும் ஒரு இந்து கோவில் இருந்தது. அந்த கோவிலை, மேம்பாலம் அமைப்பதற்காக அந்த மக்கள் விட்டுக் கொடுத்தார்கள். அந்த கோவிலும் இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த இடத்தில் மீண்டும் ஒரு கோவிலை கட்டவில்லை. இது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபுவிடம் தகவல் கொடுத்திருக்கிறோம்.
அமைச்சர் சேகர்பாபு, திருக்கடையூரில் ஒரு திருமணத்தை நிறைவாக நடத்தினார். அந்த சனாதன தர்மத்தின்படி 100-வது ஆண்டும் அவர் அதே மாதிரி ஒரு கோவிலில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். மேலும், எங்கள் தொகுதி கோவிலை உடனடியாக கட்டித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ஒரு மனிதனுக்கு சஷ்டியப்த பூர்த்தி பூஜை என்பது 60 ஆண்டுகள் நிறைந்தது. எனவே, இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனை வழிபடுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. அதற்காக நாங்கள் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம் அல்ல. நாங்கள் இந்துக்களை ஏற்றுக் கொள்கிறோம். இந்துக்கள் வழிபடும், இந்து கடவுள்களையும், ஆலயங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆகவே, நாங்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்தாலும், நீங்கள் மறுக்கின்ற பெண் கல்வி உரிமையை நாங்கள் எதிர்ப்போம். அதே போல், நீங்கள் ஆதரிக்கிற உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி ஆகிய முறைகளையும் எதிர்ப்போம். இந்துக்களை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். மேலும், உங்களுடைய கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. கோவில் கட்டுவதற்கான தகுந்த இடம் கிடைத்தவுடன் மீண்டும் அதே கோவிலை கட்டித் தரும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கும்” என்று பேசினார்.