ஈரோடு மாவட்டம், பவானி வர்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று பகல் பொழுதில், கார்த்திக், தனது வீட்டின் அருகே ஒரு இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த இளம் பெண் தான் மறைத்துவைத்திருந்த திரவத்தை கார்த்திக் மீது வீசினார். அந்தத் திரவம் கார்த்திக்கின் முகம், உடல் ஆகிய பகுதிகளில் பட்டு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. சூடான அந்தத் திரவம் பட்ட எரிச்சலில் கார்த்திக் அலறி துடிக்க அந்தப் பெண் அங்கிருந்து தப்பினார்.
கார்த்திக்கின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடலில் 50 சதவீதத்திற்கும் மேலாக காயம் ஏற்பட்டதால், அவரை அவரது உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், காதல் விவகாரம் காரணமாக அப்பெண் இவ்வாறு செய்தாரா அல்லது இந்த சம்பவத்திற்கு வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்துவந்தனர். இந்நிலையில், கார்த்திக் மீது அவரது அண்ணன் மனைவி மீனாட்சி தேவி, சூடான பாமாயிலை ஊற்றியது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி தேவியை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.