Skip to main content

புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
mk stalin


"திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் - ஏற்கனவே 2020-21ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்" என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14.2.2020 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்த “2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” மற்றும் அதன் “மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்” எல்லாம் உருவிழந்து, “கரோனா பேரிடரால்”- அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது; வேடிக்கையாகவும் இருக்கிறது.

ஏற்கனவே “4.56 லட்சம் கோடி ரூபாய்க் கடன்” என்ற சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில் - “மாநில அரசின் சொந்த வரி வருவாய் 1.33 லட்சம் கோடி கிடைக்கும்” என மதிப்பிடப்பட்டது ஆளுங்கட்சிக்கு “ஆறுதல் செய்தியாக” இருந்தது. அந்த ஆறுதலுக்கும்  இப்போது ஆபத்து வந்து விட்டது. 

மாநிலத்தின் மொத்த வரி வருவாயாக மதிப்பிடப்பட்ட ரூ.2.19 லட்சம் கோடியில், மேற்கண்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் சொந்த வருவாய் மூலம் கிடைக்குமா? என்பது “கேள்விக்குறியாக மட்டுமல்ல”- ஏற்கனவே சீரழிந்து விட்ட அ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையால், “கானல் நீராகவே” ஆகி, காணாமல் போய் இருப்பதுதான் தற்போதைய நிலவரம்.


“வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, வரலாறு காணாத கடன்” ஆகியவற்றின் கடும் பிடியில் மாநிலத்தை அ.தி.மு.க. அரசு சிக்க வைத்திருந்ததால் -தற்போதைய கரோனா- அதை மேலும் சிக்கலாக்கி - நிதிப் பேரிடரை உருவாக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.
 


இழந்த வரி வருவாயும் - சீரழிந்த நிதிநிலைமையும் மேலும் கவலைக்கிடமாகி - நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும்  “உயிர் பிழைக்குமா, இல்லையா” என்ற நிலையில் இன்றைக்கு “அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.)” இருக்கிறது.


தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும்- விவசாயத் தொழிலாளர்களும் அனைத்து வருவாயையும் இழந்து வெறுங்கையராய் இருக்கிறார்கள். மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 22.21 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 60 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்ததால், 1.42 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டார்கள். 35 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சோதனைச் சாகரத்தில் மூழ்கி - வெளியே வர முடியாமல் திணறி நிற்கிறார்கள். இந்நிலையில் விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி, விவசாயம் செய்வதற்குக் குறைந்தபட்ச மூலதனம், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்பது - ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி பண நிவாரணம் (Cash Relief) அளிப்பது, மிக முக்கியம்!


ஆனால், அதற்கான எந்தவொரு முயற்சியிலும் அ.தி.மு.க. அரசு முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை!


இந்நிலையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மாநில அரசின் நிதி நிலைமை என்று திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் - ஏற்கனவே 2020-21ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், நிச்சயம் மறுபரிசீலனை செய்திட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.


“கரோனா ஊரடங்கால்” ஏற்பட்ட “மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் முழுவதையும் மாற்றி அமைப்பது” உள்ளிட்ட விசாரணை வரம்புகளுடன், ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் மே 9-ஆம் தேதி ஓர் உயர்மட்டக் குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்திருக்கிறது என்றாலும், அந்த உயர்மட்டக் குழுவிடம் “இடைக்கால அறிக்கை” எதையும் அ.தி.மு.க. அரசு கோரவில்லை.
 

http://onelink.to/nknapp


“மூன்று மாதங்களுக்குள் அந்தக் குழு அறிக்கை அளிக்கலாம்” என்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் - அந்த அறிக்கை கிடைக்கப் பெற்று - அதன்மீது அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதற்குள், 2020-21 ஆம்  நிதியாண்டின் நான்கு – ஐந்து மாதங்கள் வீணாகி விடும்.

ஆகவே, மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் - பல தரப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினைக் கவனத்தில் வைத்தும், 2020-21 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்; அந்தக் கட்டாயத்தைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தக்க காலத்தே உணர்ந்து, தாமதியாமல், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்