தண்டனை காலம் முடிந்தும் பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஆயுள் சிறை கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் சார்பில் இணையத்தள போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
அந்தவகையில் நாகை மாவட்டம் நாகூர், வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில் சமுக இடைவெளியைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தை நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
நாகூரில் இந்தப் போராட்டம் அலங்கார வாசலில் முன்பு நடந்தது. இஸ்லாமியர்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் ஹமீது, ஆயுள் சிறைவாசி அப்துல் காதர் என்பவரின் சகோதரர் குத்புதீன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. கடந்த 21 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நாகூரைச் சேர்ந்த ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியும் முழக்கமிட்டனர்.