1977ன் போது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் அவரது ரசிகரா இருந்த நெல்லையின் கருப்பசாமிபாண்டியன் அதில் இணைந்தவர். நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதே எம்.ஜி.ஆரால், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செ.வாக பொறுப்பில் வைக்கப்பட்டவர் கருப்பசாமிபாண்டியன்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு ஜெயலலிதா கட்சிப் பொறுப்பேற்ற போது அவருக்கு தளகர்த்தராகச் செயல்பட்டவர்கள் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மற்றும் கருப்பசாமிபாண்டியன் மூவர் மட்டுமே. ஒரு சில காரணங்களுக்காக அ.தி.மு.க.லிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் கருப்பசாமிபாண்டியன்.
கட்சியின் மா.செ. எம்.எல்.ஏ. என பொறுப்புகளை வகித்த கருப்பசாமிபாண்டியன் நெல்லை ’கானா’ அண்ணாச்சி என அப்போதைய கால கட்டங்களில் தொண்டர்கள், மற்றும் அவரது நட்பு வட்டாரங்களால் அழைக்கப்பட்டவர்.
அதன் பின் தி.மு.க.விலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்டு ஓரமாக ஒதுங்கியிருந்தார் அண்ணாச்சி. எனினும் 1977 முதல் 2014 வரை 37 வருடகால அரசியல்வாதியான கானா, பல்வேறு தேர்தல்களில் களப்பணியாற்றிய அனுபவம் கொண்ட தென்மாவட்ட செல்வாக்கான புள்ளி.
தற்போது தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்த கானாவுக்கு அவரது அனுபவம் காரணமாக தென்காசி மக்களவையின் தி.மு.க.வின் பொறுப்பாளர் பதவி தரப்பட்டது.
அவரது என்ட்ரி, அவரது ஆதரவாளர்கள் லெவலில் மட்டுமல்லாது தென் மாவட்ட தி.மு.க.வில் ஒரு உத்வேகம், பரபரப்பாகச் செயல்படும் கானா, தேர்தல் வியூகங்களை வகுக்கிறார். தொகுதி தோறும் முன் நின்று தி.மு.க.வின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி களப்பணியின் வியூகங்களை விளக்குகிறார்.
சங்கரன்கோவிலில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் உரை வீச்சு நடத்திய கருப்பசாமி பாண்டியன்.
தென்காசி தொகுதியின் வேட்பாளர், தலைவர் ஸ்டாலின் என்ற நினைவின் அடிப்படையிலேயே தேர்தல் பணி புரிய வேண்டும், தி.மு.க.வின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால் ஆளும் கட்சியினர் பல இடையூறுகளைத் தர முயற்சிக்கின்றனர். தி.மு.க.வின் தொண்டர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தற்போது தமிழகத்தில் நடந்து வரும் மத்திய அரசுக்குக் காவடி தூக்கும் ஆட்சி, முடிவுக்கு வரும் என்று அழுத்தமாகப் பேசினார் கானா.
அறிமுகக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் நிர்வாகிகள் என திரளான கூட்டம் காணப்பட்டது.