
கஜா புயலால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். அதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டசபையில் இன்று நடைபெற்றது.
அமைச்சர்கள், அரசுத்துறை செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி மூலம் நேரடியாக தகவல்களை கேட்டறிந்தனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ’’கஜா புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு போக முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட 9,500 குடிசைகளில் வாழும் குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாயும், முழுமையாக பதிப்பு அடைந்த 1,500 குடிசைகளுக்கு தலா 4,100 ரூபாயும் வழங்கப்படும். மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் பதிப்பு குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு நிதி வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசுக்கு இடைக்கால அறிக்கை தயார் செய்து நாளைய தினம் அனுப்ப உள்ளோம். நிவாரணம் வழங்குவது தொடர்பாக வரும் 22-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்ட்டுள்ளது. மத்திய அரசு முதலில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு குழு அனுப்பி சேதத்தை கணக்கிட்டு முழு நிவாரணம் வழங்க வேண்டும், காரைக்காலுக்கு புயல் பாதிப்புக்கு முழு நிவாரண நிதியாக ரூ.187 கோடி வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மக்களுக்கு பொதுமக்கள் முடிந்த அளவு மருந்து, உடைகள் உள்ளிட்ட பொருட்களை தாராளமாக வழங்க வேண்டும். நிதியாக வழங்க விரும்புவோர் முதல்வர் நிவாரண நிதி மூலம் வழங்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.