
முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 28 வருடங்களாக வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் நளினியும் உள்ளனர்.
இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டனர், அதனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான். நான் இரட்டை ஆயுள் அனுபவித்துவிட்டேன், அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும். திருமண வயதில் என் மகள் உள்ளாள், நானும் சிறையில் உள்ளேன், என் மகளின் தந்தையும், என் கணவருமான முருகனும் சிறையில் உள்ளதால் மனிதாபிமான அடிப்படையிலாவுது விடுதலை செய்ய வேண்டுமென நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார் நளினி.
ராஜிவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு சிறையில் புழுங்கிக்கொண்டு உள்ளனர் நளினி உட்பட அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும். இவர்களுக்கு உடல் ரீதியாகவும் பல்வேறு உபத்திரங்கள் உருவாக தொடங்கியுள்ளன. பேரறிவாளன் சிறுநீர் தொற்றால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவமனை என மாறிமாறிச்சென்று சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் 50 வயதான நளினிக்கு உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் உருவாக தொடங்கியுள்ளதாக சிறைத்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. பல்வலியால் கடந்த சில வாரங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். சிறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த ஜீலை 29ந்தேதி நளினிக்கு பல் வலியென வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறைத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கினங்க வேலூர் போலிஸார் அழைத்துச்சென்றனர். மருத்துவமனையில் பல்வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்தபின்பும் நளினிக்கு பல்வலி இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உணவு உண்ண முடியாமல் கஸ்டப்படுவதாக சிறைத்துறையினர் கூறுகின்றனர்.