Skip to main content

நாகை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

2016 -17ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையினை உடனடியாக  வழங்க வலியுறுத்தி நாகை  மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம்  செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

d

 

நாகை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் ஆட்சியரக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.  அப்போது மேமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 2016 -17ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையினை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஆட்சியர் சுரேஷ்குமார் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

 காப்பீட்டு தொகை கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய விவசாயிகளை காட்டுமிராண்டிகள் என காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

 

இதனால் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகளை தர குறைவாக பேசிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகள் மத்தியில் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து  விவசாயிகள் தர்ணா போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்